Tuesday, March 19, 2013

சொல்லக் கூசும் கவிதை




கவிதைகளின் ட்ரெண்ட் முடிந்துவிட்டதே என்றும் வா.மு.கோமு ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பது ஊரறிந்த உண்மை ஆனால் அவரோட கவிதை எப்படி இருக்குமோ என்றும் K.பாக்யராஜ் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றாலும் அவரின் டான்ஸ் போல சொதப்பி இருப்பாரோ? போல சில முன் எண்ணங்களுடன் தான் படிக்க ஆரம்பித்தேன் தொகுப்பை. ஆச்சரியம் கவிதையில் பரதநாட்டியமே ஆடியிருக்கிறார் கவிஞர்.

வா.மு.கோமு என்றால் பகடி, பகடி என்றால் வா.மு.கோமு என்று கூறுவது மிகையாகாது.

’புன்னகை’ என்ற கவிதையில்

“புள்ளையார் பால்குடிக்கிறார் என்றும்,………………………………………………………..பசுமாட்டின் கண்களுக்குள்

எம்.ஜி.ராமசந்திரன் தெரிகிறார் என்றும்”

சிலர் மேலே குறிப்பிட்டது போல சரடு விடும் போது இவர் புன்னகையை வீசுகிறார் ஆனால் இவர் சுந்தர ராமசாமி (அ) சுரா அவர்களின் முகம் கிணற்றில் தெரிகிறது என்று சரடு விட்டபோது மட்டும் மேலிருந்து கீழாகப் பார்க்கீறார்கள் என்று சமூகத்தை பகடி செய்கிறார்.

’வசீகரா’ கவிதையில் தன் காதலி அந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்


“கே.டி வியில் கிளாசிக் மேட்னி கண்டுகூட குதூகலமடையலாம்.………சாலையில் செல்லும் இளைஞர்களின்

தூக்கத்தைக் கூட கெடுக்கலாம்”

என்று மல்லாக்க படுத்து யோசிப்பது,

’கூட படித்தவள்கள்’ கவிதையில்

“எப்பம் பார்த்தாலும் திருடிக்தின்று கொண்டிருந்த லட்சுமி பொலீசுக்கு மாமூல் கொடுத்து சாராயம் விற்கிறாள்”


என்று ஒரு முதிர்கன்னி தன் கூட படித்தவள்களை பற்றி சிந்திப்பதையும் நகைச்சுவை ததும்ப கூறியுள்ளார்.

’திரைக்காட்சிகளை முன் வைத்து’  கவிதையில்

“எந்த பெண்ணிடம் கேட்டாலும்அப்பா லண்டனில் இருக்கிறார் என்கிறாள்இதைத்தான் நான் குட்டிப் பாப்பாவாக

இருந்ததிலிருந்து அம்மா எனக்குசொல்லி வருகிறாள் என்கிறாள்.”

கோலங்கள் மெஹா சீரியலை கலாய்த்திருப்பது எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைத்தன. உங்களையும் வைக்கும்.

சினிமாவின் ’தேனீர் இடைவேளை’ கவிதையில்

“அடுத்து அரங்கிற்கு வரப்போகும்படத்தின் ஸ்டில்களைப் பார்த்தபடிஇருக்கும் சிலரையும்”


என்ற வரியை படித்தவுடன் அந்த சிலரில் நானும் ஒருவன் என்று தோன்றியது.


’திருவிழா முடிந்த வீதி’,  ’கெணறுகள் கூறும் கவிதை’ போன்ற கவிதைகளில் யதார்த்தத்தை காட்சியாக கொண்டு வந்துமிருக்கிறார்.
அதுவும் கெணறுகள் கூறும் கவிதையில் ஒவ்வொரு ஊர் கிணற்றிற்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்று நம்ம ஊர் கிணறின் கதையை கேட்பது போல முடித்திருப்பது அருமை.

வழக்கமான வழவழா கொழகொழா வடிவங்களுக்கு விடுதலை தந்து வித்தியாசமான வடிவங்களில் கவிதையை பரிசோதித்திருக்கிறார். அவற்றுள் ‘பஸ் நிறுத்த காட்சி’ , ’அம்மாவின் கவலைகள்’ , ’அக்காபேச்சு’ , ’நீ செளக்கியமா?’, ’ங்ஙா’ ஆகியவை குறிப்பிட தகுந்தவை.

ஷாஜகான் என்று சொன்னவுடன் அவரின் கள்ளக்காதலி (ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட்) மும்தாஜ் ஞாபகம் வருவது போல வா.மு.கோமு என்றவுடன் சாந்தாமணி தோன்றுவார்.
சா.மணியின் புலம்பல் படலம் , கவிஞி கமலாவின் அந்தரங்கப்பாக்கள் என்று ஒரு 5% மட்டுமே தொகுப்பில் இருப்பது ஒரு குறையே!

சிலர் அவர்கள் வசிக்கும் ஊரை விட்டு பக்கத்து ஊர் சென்று அஜால் குஜால் படத்தை முக்காடிட்டு பார்ப்பதை போல வா.மு.கோமுவின் எழுத்து பிடித்திருந்தாலும் உள்ளூர ரசித்து வெளி நபர்களிடம் மருதம்,மதனமஞ்சரி வகையறா எழுத்து என்று கூறுவார்கள்.
அப்படிபட்ட வயோதிக பெரியோர்கள் கூட மகன்களின் பராமரிப்பு இல்லாமல் சிங்கிள் பீடி வழிக்க வக்கில்லாத நிலைமையில் ஒரு கிழவன் படும் கஷ்டத்தை சொல்லும் ‘சொல்லக் கூசும் கவிதை’ , அப்பாருவின் ’ஞாவகம் 1 to 8’ போன்ற கவிதைகளை படித்தபின் நன்றாக இருப்பதாக வெளியில் கூற வாய்ப்புண்டு.

காதல் ,காமம் (ரெண்டும் ஒன்றா?), புறக்கணிப்பு, ஏமாற்றம், முதிர்கன்னியின் புலம்பல், மகளிர் கலாச்சார காவல் (www.
ஆத்தாடியோ.com ,ஆதிக்கம்), சாதியம் ,பகடி ,கடவுள் ,அரசியல் இத்யாதி ,இத்யாதி என்று தமிழ் கூறும் நல்லுலகென்ற குடையின் கீழ் கிடைக்கும் அனைத்து நிழலையும் கவிதையில் பேசியிருக்கிறார்.


மொத்தத்தில் எல்லாருக்கும் பிடிக்குமா என்றால்?

ஆப்பிள் ஐபாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை ஹெட் செட்டில் கேட்பது சிலருக்கு பிடிக்கும். தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் பாடல்களை கொரியன் போன்களில் லவுட் ஸ்பீக்கரில் கேட்பது வேறு சிலருக்கு சுகம் தரும். இந்த ’சொல்லக் கூசும் கவிதை’ தொகுப்பு இரண்டாவது ரகமே!

0 0 0

சொல்லக் கூசும் கவிதை

ஆசிரியர். வா.மு.கோமு

விலை:ரூ 90

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்



0 0 0

நன்றி குறி - சிற்றிதழ். (http://issuu.com/kurimagazine)
 

Wednesday, January 30, 2013

தல ரசிகனான கதை (கடைசி பகுதி)



'கிரீடம்'  படத்தை ஒரிஜனல் டிவிடில சமீபத்தில் தான் பார்த்தேன் ஆனாலும் போஸ்டரால் பாதிக்கப்பட்டு அதே போல் டை கட்டுவதை தொடருகிறேன்.  'பில்லா' ரிலிஸ் ஆன ஒரு வாரம் கடந்து நண்பர் சக்திவேலுடன் விசில் போட்டு பார்த்தாலும் எனக்கு திருப்தியில்லை.

பலருக்கு அஜித்தின் காமெடி புடித்திருந்ததாக சொன்ன ஏகன் - முதல் நாள் ஃபர்ஸ்ட் ஷோ திண்டுக்கல் ராஜேந்திராவில். முதல் முறையாக அஜித் படம் ஒன்றை 'உக்கார முடியல' என்று உணர்ந்த தருணம் அன்று வாய்த்தது. தியேட்டரில் ஒண்ணியும் மூட்டை பூச்சி தொல்லையென்று நினைத்துக்கொள்ள வேண்டாம் மக்களே. படமே மூட்டை பூச்சி !

அடுத்து பொம்மனஹள்ளி கிருஷ்ணா தியேட்டரில் ஒரு வாரம் ஓடி சாதனை படைத்த 'அசல்'.

படத்தை முதல் நாள் என்னுடன் பார்த்தவர்கள் யாரும் இரண்டாம் முறையும் நானே டிக்கெட் போட்டுகிறேன் என்று கூப்பிட்டும் வரவில்லை. அதனால் லோக்கல் பரோட்டா மாஸ்டர் ஒருத்தருக்கு KNOCK OUT பீர் ஊத்தி கூட்டிட்டு போனேன். படம் எனக்கு பரம திருப்தி. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்ட படமாக தோன்றியது.

லேட்டஸ்ட் மங்காத்தா,பில்லா-2வும் அவ்வகை தான். எனக்கு செகண்ட் ஹால்ஃப் மட்டுமே பிடித்திருந்தது மங்காத்தாவில்.

மொத்தத்தில் கட்-அவுட்டில் பீர் ஊத்தலை, திரையில் பால் அபிஷேகம் பண்ணலை ஆனாலும் நான் ஒரு தீவிர அஜித் ரசிகன் தான். என்றைக்கும்!


0 0 0


இன்னபிற கதைகள்:


STARAJITH, AJITHFANS
சைட்களில் தினமும் அட்டணன்ஸ் போடுவேன்.

'அஜீத் ரசிகன்' என்ற ரசிகர் மன்ற மாத இதழை VRT புக் ஸ்டோரில் ஒவ்வொரு முறை வாங்கும் போதும் கடை ஓனர் என்னை புருவம் உயர்த்தி பார்ப்பார்.

நான் சிவப்பு கம்பளம் விரித்து ரோஸ் வாட்டர் தெளித்து வரவேற்கும் விஷயங்களில் ஒன்று 'அல்டிமேட் ஸ்டார்' பட்டத்தை துறந்தது மற்றொன்று ரசிகர் மன்றங்களை கலைத்தது.

'நீ வருவாய் என' தான் எனக்கு ஆல் டைம் ஃபேவரைட். ஒருவேளை அந்த கதாபாத்திரம் லைட்டா எனக்குள் இருப்பதால் கூட பிடித்திருக்கலாம்.

பொதுவாக என்னை யாராவது முதுகில் குத்தும்போதோ, நான் ஏமாற்றபடும்போதோ அல்லது எனக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் போதோ சில பாடல்களை கண்டினியூஸா பாராங்கல் பாரம் பருத்தி பஞ்சாகும் வரை கேட்பேன். அதில் கட்டாயம் 'சத்தமில்லாத தனிமை கேட்டேன்' , 'இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கு என்ன?' ஆகிய தல பாடல்களும் உண்டு.

தைரியம் கலந்த வெளிப்படையான பேச்சை பேட்டிகளில் கேட்டும் படித்தும் இன்ஸ்பயர் ஆனவன் தான் வெளித் தோற்றத்தால் இல்லை என்பதை கூறிக்கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன்.

0 0 0

Tuesday, December 25, 2012

தல ரசிகனான கதை (2)


சென்னை எம்.ஐ.டியில் இன்ஞினியரிங் சேர்ந்து புதிய சாளரம் திறந்தாச்சு. 'ஆஞ்சநேயா', 'ஜனா' ஆகிய படங்கள் ஜுனியராக இருந்த நேரத்தில் ரிலிஸ்.பார்க்கவில்லை.

'அட்டகாசம்' தான் என்னுடைய அடுத்த ரவுண்டிற்கு அடிக்கல் என்றால் மிகையாகாது.

எனக்கு மட்டுமில்லாமல் சுற்றுப்பட்டு 18 ஊரின் அஜித் ரசிகர்களுக்கும் ஆஸ்தான தியேட்டரான தாம்பரம் வித்யாவில் முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு மிகப்பெரிய க்யூவில் நின்று முதல் பாட்டு முடிந்த பின் தான் உள்ளே போக முடிந்தது.

படம் பக்கா மாஸ்.புல்லரிப்பு. முதல் பாட்டை மிஸ்ஸியதால் திரும்பவும் பார்த்தேன்.

பின்புக்கு பின்பு அப்படம் கல்லூரி OATயில் திரையிட்டபோது நானும் சீனியர் சுஜுவும் தேங்காயில் சூடம் ஏற்றி உடைத்தோம்.ஆனால் அம்முறை படம் மொக்கையாக தெரிந்தது (இதை யாரும் நோட் பண்ணாதிங்க).

அடுத்ததாக 'ஜி' பாட்டு ரிலிஸ் ஆனதிலிருந்து 'சேமியா போல மீசை வச்ச சிறுத்தை நாங்க' பாட்டை தான் சேமியா மீசை வைத்திருந்த நான் அதிக முறை கேட்டிருப்பேன். ஆனாலும் படம் முதல் 3 நாளில் பார்க்கமுடியாமல் போனதால் 'நீ எல்லாம் என்னடா அஜித் ரசிகர்?' என்று படத்தை வீம்புக்கு பார்க்காமல் நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டிவியில் முதல்முறையாக போட்டபோது வீம்பை தளர்த்தினேன்.

அப்பறம் தல புருஷ்லி போல மாறினார். மாறினபின் முதலில் வெளிவந்த 'பரமசிவன்' படத்துக்கு முதல்நாள் இருந்த கூட்டம் போல நீங்கள் ரெங்கநாதன் ஸ்ட்ரீட்டில் மட்டுமே பார்க்கக்கூடும்.
வித்யா தியேட்டரில் இருந்து பக்கத்து தெரு வரைக்கும் துரத்தி போலீஸ் அடி கொடுக்க ஓடி வந்து நேசனலில் சிம்புவின் 'சரவணா' விற்கு சென்றோம்.

அதனால் பரமசிவனை அடுத்த நாள் நைட் சோ தான் பார்க்க முடிஞ்சது.படம் குப்பை.ஆனாலும் ரெண்டு தடவை பார்த்தேன்.

தமிழ் புத்தாண்டு அன்று ரிலிஸான 'திருப்பதி' டிக்கெட்டுக்கு லைன்ல நிற்கும் போதே செருப்பு பிஞ்சு போச்சு.நரி மூஞ்சியில் முழிக்கலைங்க,கூட்டம் அப்படி! பிஞ்ச செருப்பை கைல தூக்கிட்டு உள்ளே போய் சீட் பிடித்து 'டே ராஜா இங்க வாடா' னு என் நண்பனை சீட் மேல ஏறி நின்னு கூப்பிட்டா போலிஸ் கிட்ட அடி(யோசிச்சு பார்த்தா நரி மூஞ்சி தான் போல).

வாழ்கையில் முதல் முறையாக 'கீரை விதைப்போம்' பாட்டை ஒன்ஸ்மோர் போட்டார்கள். இதுவரைக்கு வேறு பாட்டை நான் பார்த்ததில்லை.

அக்காலகட்டத்தில் கடைசியாக வித்யா தியேட்டரில் நன்றாக ரசித்து 2 முறை பார்த்த அஜித் படம் என்றால் 'வரலாறு' தான்.

ஏன் என்றால் 'ஆழ்வார்' தாம்பரம் நேசனலில் ரிலிஸ்.அப்பவே மொக்கையாக இருக்கும் என்று நம்பினேன் அது குப்பை தியேட்டர் என்பதால். முதல் ஷோ சென்ற தோழர்களிடம் ரிவ்யூ கேட்டால் அனைத்து துவாரங்களிலும் இரத்தம் என்றார்கள். சரி எதுக்கு ரிஸ்க் என்று நான் திருட்டு டிவிடில தான் பார்த்தேன். படம் சூப்பர்.

ஒரு சூட்சமம் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் தான் எனக்கு புரிந்தது. அது 'மொக்கைனு நினைத்து அஜித் படம் பார்த்தால் படம் சுமார் என்றால் கூட சூப்பர் போல தோன்றும்' என்பது.

இப்ப நினைக்கையில் மீண்டும் தாம்பரம் வித்யா தியேட்டரில் அதே கூட்ட நெரிசலில் நின்று அஜித் படம் பார்க்கும் அனுபவம் கிட்டுமா என்ற ஏக்கம் தான் மிச்சமிருக்கிறது.

(தொடரும்)


Tuesday, December 11, 2012

தல ரசிகனான கதை



டவுசர் அணிந்து பள்ளி சென்ற காலங்களில் என் சினிமா உலகம் என்பது ரஜினிகாந்த் படமும் டி.ராஜேந்தர் படமும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த தியேட்டர். வேறு படத்திற்கு வீட்டில் செல்ல மாட்டார்கள்.

பின்புக்கு பின்பு ஆறாம் வகுப்பில் என்னை திண்டுக்கல் அருகே இருக்கும் ஸ்கூலில் சேர்த்தனர். நானும் பள்ளி விட்டா வீடும் அதற்கு வைஸ் வர்ஸாவாகவும் தான் இருந்தேன் நைன்த் படிக்கும் போது திண்டுக்கல் நாகா தியேட்டரில் ’முகவரி’ ரிலிஸ் ஆன சுபமுகூர்த்த தினம் வரை.

பள்ளி தோழர்களுடன் படத்திற்கு கிளம்பிபோன அன்று தான் அஜித்குமார் எனக்கு அறிமுகம்.

லேட் V.M.C ஹனிஃபா ’படத்துக்குள் எடுக்கும் படத்தின்’ டைரக்டரை உதாசீனப் படுத்தியதும் மழைபொங்கி தலயெழுந்து பாடும் ’ஏ நிலவே’ பாடலின் உணர்ச்சிபூர்வமான முகபாவங்கள் அவரை பச்சக் என்று மனதில் ஒட்டி வைத்தது.

அப்படத்தில் ஜோதிகா,அஜித் வெய்ட் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அப்ப வரும் வாசகத்தை பார்த்துவிட்டு ’எனக்கெல்லாம் இப்படி ஒண்ணியும் வரமாட்டிங்குதே’ என்று ஒரு அண்ணன் நக்கலடித்தது பசுமரத்தாணியாக இன்றும்.

அடிக்கடி ’கீச்சு கிளியே’ பாடலை ஹம் பண்ணியது பிடித்து போய் 15 ரூபாய்க்கு டூப்ளிக்கெட் கேசட் வாங்கினேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

மேலும் அக்காலகட்டத்தில் முகவரியின் சுபம் போட்டு முடிக்காத கிளைமாக்ஸை மாற்றிட்டாங்க என்று புரளி வேறு கிளம்பியது சில முகவரி இல்லாதவர்களால்.

அதை நம்பி சிலபல மாதங்கள் கழித்து விசில் ஊதத் தெரியாததால்(இப்ப தெரியும்) வீட்டில் உபயோக படுத்தும் பால் குக்கரின் விசிலை ஆட்டைஸ் போட்டு வேடசந்தூர் சாந்தி திரையரங்களில் பார்த்தபோது தான் தெரிந்தது தியேட்டர் ஆப்ரேட்டரே ரெடி பண்ணின கிளைமாக்ஸ் என்று!

எடிட்டர் அண்டணி போல ஆக வேண்டிய ஆப்ரேட்டர். இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை?

சரி நாம தான் அஜித் ரசிகராய்டோம் என்று அவருடைய அடுத்த படமான ’கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்’க்கு ஆயத்தம் ஆனேன். படம் கொஞ்சம் ரொம்பவே தள்ளிப் போனது. நானும் தள்ளிப்போனேன் ’ரெட்’ படம் வரை.

அவ்விடைவேளையில் நான் டிவியில் பார்த்த ’ரெட்டை ஜடை வயசும்’ , ’வாலியும்’ என்னை அஜித்தை வலுவாக பிடிக்க வைத்தது.

இப்ப எப்படி ’களவாணி’யை விஜய் டிவியில் ஒளிப்பரப்புகிறார்களோ அது போல ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் ’ரெட்டை ஜடை வயசு’ ஒளிபரப்பினர். கவுண்டரும் அஜித்தும் பண்ணுற லோலாய் தாங்கமுடியாது .

அப்பறம் வாலி படம் பார்த்த போது ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் எங்க பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்குள்ள வரவேயில்லை. அது ஏன் என்ற காரணம் தெரிய சில வருடங்கள் ஆனது:(

சரி ரெட்க்கு வருவோம்.

நான் தினத்தந்தி மற்றும் தினகரன்(பழைய சாணி பேப்பர்) ஆகியவைகளில் இருந்த ஸ்டில்லை டீக்கடைகளில் இருந்து சேகரித்து வீட்டில் ஒட்டி வைத்தேன். ஃபாண்ட் டிசைனும் அருமையாக இருக்கும்.
நிக் ஆர்ட்ஸின் ’இதிகாசம்’ ஸ்டில்லும் வைத்திருந்தேன்,இப்ப அதை காணலை என்பது உபரி செய்தி.

திண்டுக்கல் உமா தியேட்டரின் திறப்பு நாள் படம் ’ரெட்’ தான்!
முதல் ஷோவிற்கு வந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலம் தந்தாங்க என்றும் செய்தி வந்தது. என்னால் போக முடியாததால் நொந்துகொண்டேன்.

அச்சோகத்திலும் எனக்கு கிடைத்த அற்ப சந்தோசம் நான் மொட்டை அடித்திருந்தது தான். குங்குமப் பொட்டு வைத்து ரெட் கெட்டப் என்று ஊருக்குள் சொல்லிக்கலாம் இல்லையா?!

அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு படிப்பில் அதிக கவனம் செலுத்தினாலும் ’வில்லன்’ டோக்கன் ஷோ விற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த ஒரு தோழனின் தோழனிடம் சொல்லி வைத்து கிடைக்காமல் ஒட்டன்சத்திரம் சண்முகா(இன்றைய இந்தியன்) தியேட்டரில் இரண்டு முறை பார்த்தேன். ஒன்னே முக்கால் தடவை அஜித்திற்காக... மீதி கால் கிரண்க்காக...


(நாஸ்டால்ஜியா தொடரும்)

Wednesday, February 15, 2012

பரோட்டா - நான் கடந்து வந்த பாதை

பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது….பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது…”
-எஸ்.ராமகிருஷ்ணன் (’பரோட்டா மகாத்மியம்’ கட்டுரையிலிருந்து)

நான் டவுசரில் பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் முதல் ரேங்க் எடுத்தால்
என் பெற்றோர் பரோட்டா வாங்க காசு தருவார்கள். மாதம் ஒருமுறை பரிட்சை நடத்தும் பள்ளி என்பதால் பரோட்டாவிற்காகவும் படித்தேன் என்றால் அது மிகையாகாது.

அன்றைய காலக்கட்டத்தில் 60 பைசாவிலிருந்த எங்க ஊர் பரோட்டா 6 ரூ வரை பொருளாதர முன்னேற்றம் அடைந்த இன்றைய நிலையிலும் எனக்கு பரோட்டாவின் மேல் உள்ள விரகதாபம் தீரவில்லை. 

பரோட்டா என்றவுடன் ஒவ்வொருவருக்கும் அது ஒரு ஞாபகத்தை தரும். எனக்கு வேடசந்தூர் கிட்டு நாயக்கர் ஹோட்டல் யானை கால் மாஸ்டரும், மினி நாடார் ஹோட்டல் டி.பி வந்தவர் போல இருக்கும் மாஸ்டரும் கட்டாயம் ஞாபகத்திற்கு வருவார்கள். 

பெங்களுரில் பல இடங்களில் கொத்து பரோட்டா என்ற பெயரில் தருவதை சாப்பிடும் போதும் மனசு நம்மூர் கொத்து பரோட்டாவை நினைத்து ஏங்கும்.



ஒரு நல்ல மாஸ்டரிடம் பெற்ற கேள்விச்செல்வத்தில் பால்,மைதா,முட்டை,ஜீனி போன்ற அபிமான நட்சத்திரங்களை சேர்த்து தான் பரோட்டா செய்வார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் சிலபல உணவகங்களில் லாப நோக்கத்தில் சில நட்சத்திரங்களை விட்டுவிடுகிறார்கள் என்பது தான் நிதர்சனம். 

’தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டாஎன்று பாட்டு பாடியிருந்தாலும் பரோட்டாவிற்கு தொட்டுகொள்ள சரியான பொருத்தம் குளம்பு தான். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் வழக்கில் உள்ளது.

சென்னையும் அதை சுற்றியுள்ள இடங்களில் - சேர்வா , தென் மாவட்டங்களில் - சால்னா , இன்ன பிற இடங்களில் - குருமா. 
 
கல்லூரியில் படித்த நண்பர்கள் உ.பா அருந்திவிட்டு குரோம்பேட்டை ஏர்வேஹோட்டலில் பரோட்டாவும் சேர்வாவும் தவறாமல் சாப்பிடுவதுவதை ஒரு நாகரீகமாகவே கருதினர். 

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் புத்தகத்தில் ஷாநவாஸ் பஞ்சாபில் இருந்து தான் பரோட்டா தென்னிந்தியாவிற்குள் வந்தது என்று குறிப்பிட்டிருந்தாலும் எனக்கு பரோட்டா என்பது பேல்பூரி,சப்பாத்தி மாதிரி வடநாட்டு சமாச்சாரம் என்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.  

ஏனால் ஹைதராபாத்தில்ஆல்லு பராத்தா’ கிடைக்கும் ’ரோட்டி’ கிடைக்கும் பரோட்டா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் மெஹபு நகர் (தெலுங்கானா) போகும் வழியில் ஒரு தமிழனின் (நோட் திஸ் பாய்ண்ட்) கடையில் தான் பரோட்டா சாப்பிட்டேன். 

சிங்கப்பூரில் ஷாநவாஸ் போன்றோர் பரோட்டா கடை வைத்திருக்கிறார்கள், மலேசியாவிலும் நல்ல தரமான பரோட்டா கிடைக்கிறது. அங்கும் தமிழர்களும் 10 லட்சம் இருக்கிறார்களே? 

அதனால் தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி,தோசை மட்டுமில்லை பரோட்டாவும் தான் என்று தாழ்மையுடன் கூறி

நீங்கள் யாரேனும் ஒட்டன்சத்திரத்தை கடந்து செல்பவர்களாக இருந்தால்
ஒ.சத்திரம் பேருந்து நிலையத்திக்கு எதிரில் இருக்கும் ஹோட்டல் அபர்ணா ரேகாவில் பார்சல் கட்டிக்கொண்டு போங்க
அதுவும் அவர்கள் பரோட்டாவை பீஸ் பீஸாக பிச்சு, கிழி கிழினு கிழிச்சு(கலா மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவேண்டாம்) சால்னாவை அதில் ஊற்றி கட்டி தருவார்கள் அந்த டேஸ்டை வர்ணிக்க வார்த்தைகளை கட்டாயம் தேடுவிங்க என்று முடித்துக்கொள்கிறேன்