Wednesday, February 15, 2012

பரோட்டா - நான் கடந்து வந்த பாதை

பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது….பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது…”
-எஸ்.ராமகிருஷ்ணன் (’பரோட்டா மகாத்மியம்’ கட்டுரையிலிருந்து)

நான் டவுசரில் பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் முதல் ரேங்க் எடுத்தால்
என் பெற்றோர் பரோட்டா வாங்க காசு தருவார்கள். மாதம் ஒருமுறை பரிட்சை நடத்தும் பள்ளி என்பதால் பரோட்டாவிற்காகவும் படித்தேன் என்றால் அது மிகையாகாது.

அன்றைய காலக்கட்டத்தில் 60 பைசாவிலிருந்த எங்க ஊர் பரோட்டா 6 ரூ வரை பொருளாதர முன்னேற்றம் அடைந்த இன்றைய நிலையிலும் எனக்கு பரோட்டாவின் மேல் உள்ள விரகதாபம் தீரவில்லை. 

பரோட்டா என்றவுடன் ஒவ்வொருவருக்கும் அது ஒரு ஞாபகத்தை தரும். எனக்கு வேடசந்தூர் கிட்டு நாயக்கர் ஹோட்டல் யானை கால் மாஸ்டரும், மினி நாடார் ஹோட்டல் டி.பி வந்தவர் போல இருக்கும் மாஸ்டரும் கட்டாயம் ஞாபகத்திற்கு வருவார்கள். 

பெங்களுரில் பல இடங்களில் கொத்து பரோட்டா என்ற பெயரில் தருவதை சாப்பிடும் போதும் மனசு நம்மூர் கொத்து பரோட்டாவை நினைத்து ஏங்கும்.ஒரு நல்ல மாஸ்டரிடம் பெற்ற கேள்விச்செல்வத்தில் பால்,மைதா,முட்டை,ஜீனி போன்ற அபிமான நட்சத்திரங்களை சேர்த்து தான் பரோட்டா செய்வார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் சிலபல உணவகங்களில் லாப நோக்கத்தில் சில நட்சத்திரங்களை விட்டுவிடுகிறார்கள் என்பது தான் நிதர்சனம். 

’தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டாஎன்று பாட்டு பாடியிருந்தாலும் பரோட்டாவிற்கு தொட்டுகொள்ள சரியான பொருத்தம் குளம்பு தான். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் வழக்கில் உள்ளது.

சென்னையும் அதை சுற்றியுள்ள இடங்களில் - சேர்வா , தென் மாவட்டங்களில் - சால்னா , இன்ன பிற இடங்களில் - குருமா. 
 
கல்லூரியில் படித்த நண்பர்கள் உ.பா அருந்திவிட்டு குரோம்பேட்டை ஏர்வேஹோட்டலில் பரோட்டாவும் சேர்வாவும் தவறாமல் சாப்பிடுவதுவதை ஒரு நாகரீகமாகவே கருதினர். 

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் புத்தகத்தில் ஷாநவாஸ் பஞ்சாபில் இருந்து தான் பரோட்டா தென்னிந்தியாவிற்குள் வந்தது என்று குறிப்பிட்டிருந்தாலும் எனக்கு பரோட்டா என்பது பேல்பூரி,சப்பாத்தி மாதிரி வடநாட்டு சமாச்சாரம் என்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.  

ஏனால் ஹைதராபாத்தில்ஆல்லு பராத்தா’ கிடைக்கும் ’ரோட்டி’ கிடைக்கும் பரோட்டா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் மெஹபு நகர் (தெலுங்கானா) போகும் வழியில் ஒரு தமிழனின் (நோட் திஸ் பாய்ண்ட்) கடையில் தான் பரோட்டா சாப்பிட்டேன். 

சிங்கப்பூரில் ஷாநவாஸ் போன்றோர் பரோட்டா கடை வைத்திருக்கிறார்கள், மலேசியாவிலும் நல்ல தரமான பரோட்டா கிடைக்கிறது. அங்கும் தமிழர்களும் 10 லட்சம் இருக்கிறார்களே? 

அதனால் தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி,தோசை மட்டுமில்லை பரோட்டாவும் தான் என்று தாழ்மையுடன் கூறி

நீங்கள் யாரேனும் ஒட்டன்சத்திரத்தை கடந்து செல்பவர்களாக இருந்தால்
ஒ.சத்திரம் பேருந்து நிலையத்திக்கு எதிரில் இருக்கும் ஹோட்டல் அபர்ணா ரேகாவில் பார்சல் கட்டிக்கொண்டு போங்க
அதுவும் அவர்கள் பரோட்டாவை பீஸ் பீஸாக பிச்சு, கிழி கிழினு கிழிச்சு(கலா மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவேண்டாம்) சால்னாவை அதில் ஊற்றி கட்டி தருவார்கள் அந்த டேஸ்டை வர்ணிக்க வார்த்தைகளை கட்டாயம் தேடுவிங்க என்று முடித்துக்கொள்கிறேன்