Tuesday, December 11, 2012

தல ரசிகனான கதைடவுசர் அணிந்து பள்ளி சென்ற காலங்களில் என் சினிமா உலகம் என்பது ரஜினிகாந்த் படமும் டி.ராஜேந்தர் படமும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த தியேட்டர். வேறு படத்திற்கு வீட்டில் செல்ல மாட்டார்கள்.

பின்புக்கு பின்பு ஆறாம் வகுப்பில் என்னை திண்டுக்கல் அருகே இருக்கும் ஸ்கூலில் சேர்த்தனர். நானும் பள்ளி விட்டா வீடும் அதற்கு வைஸ் வர்ஸாவாகவும் தான் இருந்தேன் நைன்த் படிக்கும் போது திண்டுக்கல் நாகா தியேட்டரில் ’முகவரி’ ரிலிஸ் ஆன சுபமுகூர்த்த தினம் வரை.

பள்ளி தோழர்களுடன் படத்திற்கு கிளம்பிபோன அன்று தான் அஜித்குமார் எனக்கு அறிமுகம்.

லேட் V.M.C ஹனிஃபா ’படத்துக்குள் எடுக்கும் படத்தின்’ டைரக்டரை உதாசீனப் படுத்தியதும் மழைபொங்கி தலயெழுந்து பாடும் ’ஏ நிலவே’ பாடலின் உணர்ச்சிபூர்வமான முகபாவங்கள் அவரை பச்சக் என்று மனதில் ஒட்டி வைத்தது.

அப்படத்தில் ஜோதிகா,அஜித் வெய்ட் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அப்ப வரும் வாசகத்தை பார்த்துவிட்டு ’எனக்கெல்லாம் இப்படி ஒண்ணியும் வரமாட்டிங்குதே’ என்று ஒரு அண்ணன் நக்கலடித்தது பசுமரத்தாணியாக இன்றும்.

அடிக்கடி ’கீச்சு கிளியே’ பாடலை ஹம் பண்ணியது பிடித்து போய் 15 ரூபாய்க்கு டூப்ளிக்கெட் கேசட் வாங்கினேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

மேலும் அக்காலகட்டத்தில் முகவரியின் சுபம் போட்டு முடிக்காத கிளைமாக்ஸை மாற்றிட்டாங்க என்று புரளி வேறு கிளம்பியது சில முகவரி இல்லாதவர்களால்.

அதை நம்பி சிலபல மாதங்கள் கழித்து விசில் ஊதத் தெரியாததால்(இப்ப தெரியும்) வீட்டில் உபயோக படுத்தும் பால் குக்கரின் விசிலை ஆட்டைஸ் போட்டு வேடசந்தூர் சாந்தி திரையரங்களில் பார்த்தபோது தான் தெரிந்தது தியேட்டர் ஆப்ரேட்டரே ரெடி பண்ணின கிளைமாக்ஸ் என்று!

எடிட்டர் அண்டணி போல ஆக வேண்டிய ஆப்ரேட்டர். இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை?

சரி நாம தான் அஜித் ரசிகராய்டோம் என்று அவருடைய அடுத்த படமான ’கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்’க்கு ஆயத்தம் ஆனேன். படம் கொஞ்சம் ரொம்பவே தள்ளிப் போனது. நானும் தள்ளிப்போனேன் ’ரெட்’ படம் வரை.

அவ்விடைவேளையில் நான் டிவியில் பார்த்த ’ரெட்டை ஜடை வயசும்’ , ’வாலியும்’ என்னை அஜித்தை வலுவாக பிடிக்க வைத்தது.

இப்ப எப்படி ’களவாணி’யை விஜய் டிவியில் ஒளிப்பரப்புகிறார்களோ அது போல ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் ’ரெட்டை ஜடை வயசு’ ஒளிபரப்பினர். கவுண்டரும் அஜித்தும் பண்ணுற லோலாய் தாங்கமுடியாது .

அப்பறம் வாலி படம் பார்த்த போது ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் எங்க பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்குள்ள வரவேயில்லை. அது ஏன் என்ற காரணம் தெரிய சில வருடங்கள் ஆனது:(

சரி ரெட்க்கு வருவோம்.

நான் தினத்தந்தி மற்றும் தினகரன்(பழைய சாணி பேப்பர்) ஆகியவைகளில் இருந்த ஸ்டில்லை டீக்கடைகளில் இருந்து சேகரித்து வீட்டில் ஒட்டி வைத்தேன். ஃபாண்ட் டிசைனும் அருமையாக இருக்கும்.
நிக் ஆர்ட்ஸின் ’இதிகாசம்’ ஸ்டில்லும் வைத்திருந்தேன்,இப்ப அதை காணலை என்பது உபரி செய்தி.

திண்டுக்கல் உமா தியேட்டரின் திறப்பு நாள் படம் ’ரெட்’ தான்!
முதல் ஷோவிற்கு வந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலம் தந்தாங்க என்றும் செய்தி வந்தது. என்னால் போக முடியாததால் நொந்துகொண்டேன்.

அச்சோகத்திலும் எனக்கு கிடைத்த அற்ப சந்தோசம் நான் மொட்டை அடித்திருந்தது தான். குங்குமப் பொட்டு வைத்து ரெட் கெட்டப் என்று ஊருக்குள் சொல்லிக்கலாம் இல்லையா?!

அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு படிப்பில் அதிக கவனம் செலுத்தினாலும் ’வில்லன்’ டோக்கன் ஷோ விற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த ஒரு தோழனின் தோழனிடம் சொல்லி வைத்து கிடைக்காமல் ஒட்டன்சத்திரம் சண்முகா(இன்றைய இந்தியன்) தியேட்டரில் இரண்டு முறை பார்த்தேன். ஒன்னே முக்கால் தடவை அஜித்திற்காக... மீதி கால் கிரண்க்காக...


(நாஸ்டால்ஜியா தொடரும்)

No comments: