Tuesday, December 25, 2012

தல ரசிகனான கதை (2)


சென்னை எம்.ஐ.டியில் இன்ஞினியரிங் சேர்ந்து புதிய சாளரம் திறந்தாச்சு. 'ஆஞ்சநேயா', 'ஜனா' ஆகிய படங்கள் ஜுனியராக இருந்த நேரத்தில் ரிலிஸ்.பார்க்கவில்லை.

'அட்டகாசம்' தான் என்னுடைய அடுத்த ரவுண்டிற்கு அடிக்கல் என்றால் மிகையாகாது.

எனக்கு மட்டுமில்லாமல் சுற்றுப்பட்டு 18 ஊரின் அஜித் ரசிகர்களுக்கும் ஆஸ்தான தியேட்டரான தாம்பரம் வித்யாவில் முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு மிகப்பெரிய க்யூவில் நின்று முதல் பாட்டு முடிந்த பின் தான் உள்ளே போக முடிந்தது.

படம் பக்கா மாஸ்.புல்லரிப்பு. முதல் பாட்டை மிஸ்ஸியதால் திரும்பவும் பார்த்தேன்.

பின்புக்கு பின்பு அப்படம் கல்லூரி OATயில் திரையிட்டபோது நானும் சீனியர் சுஜுவும் தேங்காயில் சூடம் ஏற்றி உடைத்தோம்.ஆனால் அம்முறை படம் மொக்கையாக தெரிந்தது (இதை யாரும் நோட் பண்ணாதிங்க).

அடுத்ததாக 'ஜி' பாட்டு ரிலிஸ் ஆனதிலிருந்து 'சேமியா போல மீசை வச்ச சிறுத்தை நாங்க' பாட்டை தான் சேமியா மீசை வைத்திருந்த நான் அதிக முறை கேட்டிருப்பேன். ஆனாலும் படம் முதல் 3 நாளில் பார்க்கமுடியாமல் போனதால் 'நீ எல்லாம் என்னடா அஜித் ரசிகர்?' என்று படத்தை வீம்புக்கு பார்க்காமல் நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டிவியில் முதல்முறையாக போட்டபோது வீம்பை தளர்த்தினேன்.

அப்பறம் தல புருஷ்லி போல மாறினார். மாறினபின் முதலில் வெளிவந்த 'பரமசிவன்' படத்துக்கு முதல்நாள் இருந்த கூட்டம் போல நீங்கள் ரெங்கநாதன் ஸ்ட்ரீட்டில் மட்டுமே பார்க்கக்கூடும்.
வித்யா தியேட்டரில் இருந்து பக்கத்து தெரு வரைக்கும் துரத்தி போலீஸ் அடி கொடுக்க ஓடி வந்து நேசனலில் சிம்புவின் 'சரவணா' விற்கு சென்றோம்.

அதனால் பரமசிவனை அடுத்த நாள் நைட் சோ தான் பார்க்க முடிஞ்சது.படம் குப்பை.ஆனாலும் ரெண்டு தடவை பார்த்தேன்.

தமிழ் புத்தாண்டு அன்று ரிலிஸான 'திருப்பதி' டிக்கெட்டுக்கு லைன்ல நிற்கும் போதே செருப்பு பிஞ்சு போச்சு.நரி மூஞ்சியில் முழிக்கலைங்க,கூட்டம் அப்படி! பிஞ்ச செருப்பை கைல தூக்கிட்டு உள்ளே போய் சீட் பிடித்து 'டே ராஜா இங்க வாடா' னு என் நண்பனை சீட் மேல ஏறி நின்னு கூப்பிட்டா போலிஸ் கிட்ட அடி(யோசிச்சு பார்த்தா நரி மூஞ்சி தான் போல).

வாழ்கையில் முதல் முறையாக 'கீரை விதைப்போம்' பாட்டை ஒன்ஸ்மோர் போட்டார்கள். இதுவரைக்கு வேறு பாட்டை நான் பார்த்ததில்லை.

அக்காலகட்டத்தில் கடைசியாக வித்யா தியேட்டரில் நன்றாக ரசித்து 2 முறை பார்த்த அஜித் படம் என்றால் 'வரலாறு' தான்.

ஏன் என்றால் 'ஆழ்வார்' தாம்பரம் நேசனலில் ரிலிஸ்.அப்பவே மொக்கையாக இருக்கும் என்று நம்பினேன் அது குப்பை தியேட்டர் என்பதால். முதல் ஷோ சென்ற தோழர்களிடம் ரிவ்யூ கேட்டால் அனைத்து துவாரங்களிலும் இரத்தம் என்றார்கள். சரி எதுக்கு ரிஸ்க் என்று நான் திருட்டு டிவிடில தான் பார்த்தேன். படம் சூப்பர்.

ஒரு சூட்சமம் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் தான் எனக்கு புரிந்தது. அது 'மொக்கைனு நினைத்து அஜித் படம் பார்த்தால் படம் சுமார் என்றால் கூட சூப்பர் போல தோன்றும்' என்பது.

இப்ப நினைக்கையில் மீண்டும் தாம்பரம் வித்யா தியேட்டரில் அதே கூட்ட நெரிசலில் நின்று அஜித் படம் பார்க்கும் அனுபவம் கிட்டுமா என்ற ஏக்கம் தான் மிச்சமிருக்கிறது.

(தொடரும்)


Tuesday, December 11, 2012

தல ரசிகனான கதை



டவுசர் அணிந்து பள்ளி சென்ற காலங்களில் என் சினிமா உலகம் என்பது ரஜினிகாந்த் படமும் டி.ராஜேந்தர் படமும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த தியேட்டர். வேறு படத்திற்கு வீட்டில் செல்ல மாட்டார்கள்.

பின்புக்கு பின்பு ஆறாம் வகுப்பில் என்னை திண்டுக்கல் அருகே இருக்கும் ஸ்கூலில் சேர்த்தனர். நானும் பள்ளி விட்டா வீடும் அதற்கு வைஸ் வர்ஸாவாகவும் தான் இருந்தேன் நைன்த் படிக்கும் போது திண்டுக்கல் நாகா தியேட்டரில் ’முகவரி’ ரிலிஸ் ஆன சுபமுகூர்த்த தினம் வரை.

பள்ளி தோழர்களுடன் படத்திற்கு கிளம்பிபோன அன்று தான் அஜித்குமார் எனக்கு அறிமுகம்.

லேட் V.M.C ஹனிஃபா ’படத்துக்குள் எடுக்கும் படத்தின்’ டைரக்டரை உதாசீனப் படுத்தியதும் மழைபொங்கி தலயெழுந்து பாடும் ’ஏ நிலவே’ பாடலின் உணர்ச்சிபூர்வமான முகபாவங்கள் அவரை பச்சக் என்று மனதில் ஒட்டி வைத்தது.

அப்படத்தில் ஜோதிகா,அஜித் வெய்ட் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அப்ப வரும் வாசகத்தை பார்த்துவிட்டு ’எனக்கெல்லாம் இப்படி ஒண்ணியும் வரமாட்டிங்குதே’ என்று ஒரு அண்ணன் நக்கலடித்தது பசுமரத்தாணியாக இன்றும்.

அடிக்கடி ’கீச்சு கிளியே’ பாடலை ஹம் பண்ணியது பிடித்து போய் 15 ரூபாய்க்கு டூப்ளிக்கெட் கேசட் வாங்கினேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

மேலும் அக்காலகட்டத்தில் முகவரியின் சுபம் போட்டு முடிக்காத கிளைமாக்ஸை மாற்றிட்டாங்க என்று புரளி வேறு கிளம்பியது சில முகவரி இல்லாதவர்களால்.

அதை நம்பி சிலபல மாதங்கள் கழித்து விசில் ஊதத் தெரியாததால்(இப்ப தெரியும்) வீட்டில் உபயோக படுத்தும் பால் குக்கரின் விசிலை ஆட்டைஸ் போட்டு வேடசந்தூர் சாந்தி திரையரங்களில் பார்த்தபோது தான் தெரிந்தது தியேட்டர் ஆப்ரேட்டரே ரெடி பண்ணின கிளைமாக்ஸ் என்று!

எடிட்டர் அண்டணி போல ஆக வேண்டிய ஆப்ரேட்டர். இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை?

சரி நாம தான் அஜித் ரசிகராய்டோம் என்று அவருடைய அடுத்த படமான ’கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்’க்கு ஆயத்தம் ஆனேன். படம் கொஞ்சம் ரொம்பவே தள்ளிப் போனது. நானும் தள்ளிப்போனேன் ’ரெட்’ படம் வரை.

அவ்விடைவேளையில் நான் டிவியில் பார்த்த ’ரெட்டை ஜடை வயசும்’ , ’வாலியும்’ என்னை அஜித்தை வலுவாக பிடிக்க வைத்தது.

இப்ப எப்படி ’களவாணி’யை விஜய் டிவியில் ஒளிப்பரப்புகிறார்களோ அது போல ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் ’ரெட்டை ஜடை வயசு’ ஒளிபரப்பினர். கவுண்டரும் அஜித்தும் பண்ணுற லோலாய் தாங்கமுடியாது .

அப்பறம் வாலி படம் பார்த்த போது ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் எங்க பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்குள்ள வரவேயில்லை. அது ஏன் என்ற காரணம் தெரிய சில வருடங்கள் ஆனது:(

சரி ரெட்க்கு வருவோம்.

நான் தினத்தந்தி மற்றும் தினகரன்(பழைய சாணி பேப்பர்) ஆகியவைகளில் இருந்த ஸ்டில்லை டீக்கடைகளில் இருந்து சேகரித்து வீட்டில் ஒட்டி வைத்தேன். ஃபாண்ட் டிசைனும் அருமையாக இருக்கும்.
நிக் ஆர்ட்ஸின் ’இதிகாசம்’ ஸ்டில்லும் வைத்திருந்தேன்,இப்ப அதை காணலை என்பது உபரி செய்தி.

திண்டுக்கல் உமா தியேட்டரின் திறப்பு நாள் படம் ’ரெட்’ தான்!
முதல் ஷோவிற்கு வந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலம் தந்தாங்க என்றும் செய்தி வந்தது. என்னால் போக முடியாததால் நொந்துகொண்டேன்.

அச்சோகத்திலும் எனக்கு கிடைத்த அற்ப சந்தோசம் நான் மொட்டை அடித்திருந்தது தான். குங்குமப் பொட்டு வைத்து ரெட் கெட்டப் என்று ஊருக்குள் சொல்லிக்கலாம் இல்லையா?!

அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு படிப்பில் அதிக கவனம் செலுத்தினாலும் ’வில்லன்’ டோக்கன் ஷோ விற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த ஒரு தோழனின் தோழனிடம் சொல்லி வைத்து கிடைக்காமல் ஒட்டன்சத்திரம் சண்முகா(இன்றைய இந்தியன்) தியேட்டரில் இரண்டு முறை பார்த்தேன். ஒன்னே முக்கால் தடவை அஜித்திற்காக... மீதி கால் கிரண்க்காக...


(நாஸ்டால்ஜியா தொடரும்)

Wednesday, February 15, 2012

பரோட்டா - நான் கடந்து வந்த பாதை

பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது….பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது…”
-எஸ்.ராமகிருஷ்ணன் (’பரோட்டா மகாத்மியம்’ கட்டுரையிலிருந்து)

நான் டவுசரில் பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் முதல் ரேங்க் எடுத்தால்
என் பெற்றோர் பரோட்டா வாங்க காசு தருவார்கள். மாதம் ஒருமுறை பரிட்சை நடத்தும் பள்ளி என்பதால் பரோட்டாவிற்காகவும் படித்தேன் என்றால் அது மிகையாகாது.

அன்றைய காலக்கட்டத்தில் 60 பைசாவிலிருந்த எங்க ஊர் பரோட்டா 6 ரூ வரை பொருளாதர முன்னேற்றம் அடைந்த இன்றைய நிலையிலும் எனக்கு பரோட்டாவின் மேல் உள்ள விரகதாபம் தீரவில்லை. 

பரோட்டா என்றவுடன் ஒவ்வொருவருக்கும் அது ஒரு ஞாபகத்தை தரும். எனக்கு வேடசந்தூர் கிட்டு நாயக்கர் ஹோட்டல் யானை கால் மாஸ்டரும், மினி நாடார் ஹோட்டல் டி.பி வந்தவர் போல இருக்கும் மாஸ்டரும் கட்டாயம் ஞாபகத்திற்கு வருவார்கள். 

பெங்களுரில் பல இடங்களில் கொத்து பரோட்டா என்ற பெயரில் தருவதை சாப்பிடும் போதும் மனசு நம்மூர் கொத்து பரோட்டாவை நினைத்து ஏங்கும்.



ஒரு நல்ல மாஸ்டரிடம் பெற்ற கேள்விச்செல்வத்தில் பால்,மைதா,முட்டை,ஜீனி போன்ற அபிமான நட்சத்திரங்களை சேர்த்து தான் பரோட்டா செய்வார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் சிலபல உணவகங்களில் லாப நோக்கத்தில் சில நட்சத்திரங்களை விட்டுவிடுகிறார்கள் என்பது தான் நிதர்சனம். 

’தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டாஎன்று பாட்டு பாடியிருந்தாலும் பரோட்டாவிற்கு தொட்டுகொள்ள சரியான பொருத்தம் குளம்பு தான். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் வழக்கில் உள்ளது.

சென்னையும் அதை சுற்றியுள்ள இடங்களில் - சேர்வா , தென் மாவட்டங்களில் - சால்னா , இன்ன பிற இடங்களில் - குருமா. 
 
கல்லூரியில் படித்த நண்பர்கள் உ.பா அருந்திவிட்டு குரோம்பேட்டை ஏர்வேஹோட்டலில் பரோட்டாவும் சேர்வாவும் தவறாமல் சாப்பிடுவதுவதை ஒரு நாகரீகமாகவே கருதினர். 

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் புத்தகத்தில் ஷாநவாஸ் பஞ்சாபில் இருந்து தான் பரோட்டா தென்னிந்தியாவிற்குள் வந்தது என்று குறிப்பிட்டிருந்தாலும் எனக்கு பரோட்டா என்பது பேல்பூரி,சப்பாத்தி மாதிரி வடநாட்டு சமாச்சாரம் என்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.  

ஏனால் ஹைதராபாத்தில்ஆல்லு பராத்தா’ கிடைக்கும் ’ரோட்டி’ கிடைக்கும் பரோட்டா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் மெஹபு நகர் (தெலுங்கானா) போகும் வழியில் ஒரு தமிழனின் (நோட் திஸ் பாய்ண்ட்) கடையில் தான் பரோட்டா சாப்பிட்டேன். 

சிங்கப்பூரில் ஷாநவாஸ் போன்றோர் பரோட்டா கடை வைத்திருக்கிறார்கள், மலேசியாவிலும் நல்ல தரமான பரோட்டா கிடைக்கிறது. அங்கும் தமிழர்களும் 10 லட்சம் இருக்கிறார்களே? 

அதனால் தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி,தோசை மட்டுமில்லை பரோட்டாவும் தான் என்று தாழ்மையுடன் கூறி

நீங்கள் யாரேனும் ஒட்டன்சத்திரத்தை கடந்து செல்பவர்களாக இருந்தால்
ஒ.சத்திரம் பேருந்து நிலையத்திக்கு எதிரில் இருக்கும் ஹோட்டல் அபர்ணா ரேகாவில் பார்சல் கட்டிக்கொண்டு போங்க
அதுவும் அவர்கள் பரோட்டாவை பீஸ் பீஸாக பிச்சு, கிழி கிழினு கிழிச்சு(கலா மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவேண்டாம்) சால்னாவை அதில் ஊற்றி கட்டி தருவார்கள் அந்த டேஸ்டை வர்ணிக்க வார்த்தைகளை கட்டாயம் தேடுவிங்க என்று முடித்துக்கொள்கிறேன்


 

 

Wednesday, January 4, 2012

டி.ராஜேந்தர் Vs பேரரசு

பேரரசு இயக்கிக்கொண்டிருக்கும் திருத்தணி படத்தில் அவரே இசையமைப்பாளர். இச்செய்தியின் மூலம் பேரரசு தான் டி.ராஜேந்தரின் அதிகாரப்பூர்வ கலையுலக வாரிசு என்று பேச்சுக்களும் வருகிறது. இத்தருணத்தில் இருவரை பற்றியும் சிறு ஆய்வு செய்தால் என்ன? என்று எழுதப்பட்ட கட்டுரையே இது.

                                  
டி.ஆர் +



·      டி.வி சீரியலின் ஆதிக்கம் இல்லாத காலத்தில் தங்கச்சி,அம்மா செண்டிமெண்ட், சித்தி,மாமியார் கொடுமைகள் போன்ற தீம்களில் படங்கள் எடுத்து மக்களை பொழுதுபோக்கியது.

·      கவிதைத்தனமாக பாடல்கள் எழுதியது. அதிலும் விரக்தி வகை பாடல் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே. காதலில் தோல்வி அடைந்தவர்கள் (எத்தனையாவது காதல் என்றாலும்) கட்டாயம் கேட்கத் தூண்டும்.

எனக்கு இவர் எழுதிய பாடல்களில் மிகவும் பிடித்த வரிகள் மைதிலி என்னை காதலி படத்தில் இருந்து ’லங்கையிட்டால் ஒரு மாது’ பாட்டில் உள்ள

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

·      இவருடைய இசையில் உருவான பாடல்களில் டூயட், சோகப் பாடல்கள் இன்றைக்கும் பலரால் FM களிலோ மியூசிக் சேனல்களிலோ கேட்கப்டுகிறது. பூக்கள் விடும் தூது,கிளிஞ்சல்கள்,பூக்களை பறிக்காதிங்க etc போன்ற
படங்களுக்கு பாடல்,இசை மட்டும் செய்துள்ளார்.




டிஆர்


·      இதுவரை இவர் கொடுத்த பேட்டிகளில் (அறிக்கைகள் அல்ல) கேட்ட கேள்விக்கு தகுந்த பதில் சொல்லாதது.

கற்பனையா ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: ஒரு பாடலுக்கு  மட்டும்  குத்தாட்டம்  போடும்  நடிகைகளில்  உங்களுக்கு பிடித்தவர் யார் சார்?

பதில்: நீங்க பார்த்திங்கனா என்னுடைய ‘உறவைக் காத்தகிளி படத்தில் நான் சாராயம் குடிக்கிற மாதிரி நடிச்சுருப்பேன்.அது வெளித்தோற்றத்துக்குத் தான் சாராயம் அதுக்குள்ள இருந்தது பச்சை தண்ணி,ஈழப் பிரச்சனையில் இலங்கை ராணுவம் போர் தொடுத்த இடம் வன்னி.

இது போல எதாவது கூறுவார். இதுவரை கவனிக்காதவர்கள் எதாவது பேட்டியை யூ டியூபில்(YOU TUBE) காணவும்.

·      இப்பவும் நான் யூத் என்று கூறி ’ஒரு தலை காதல்’ படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறப்பது. இப்படம் கட்டாயம் இளைஞர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை!

·       நான் தான், நான் மட்டும் தான் பெரிய ஆள் என்று நினைக்கும் மனப்பான்மை.

கூலிக்காரன்,சம்சார சங்கீதம் போன்ற வருடைய படங்களில் கீபோர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர் ரஹ்மானை ஆஸ்கார் வாங்கியதற்காக ஒரு சின்ன வாழ்த்துக்கூட சொல்லவில்லை என்பது ஒரு சோறு.


பேரரசு +

·       இளைய தளபதி விஜயை வைத்து இரண்டு படங்கள் இயக்கி அதை ஹிட் படமாக ஆக்கியது.

·      டும்டும்டும் படத்திற்கு வசனம் எழுதியது, ஆனால் டைட்டில் கார்டில் இவர் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது கூட மசாலா படங்களின் பக்கம் அவர் வருவதற்கு காரணம் ஆகியிருக்கலாம்.

·       B & C சென்டர் ரசிகர்களை திருப்தி படுத்தும் ஒரு மினிமம் கேரண்ட்டி டைரக்டராக இருப்பது.




பேரரசு



·      ஒரே மாதிரி ஹீரோயிச காட்சிகளை அவருடைய எல்லாப் படங்களிலும் வைத்து அரச்ச மாவை அரைப்பது..

·      படத்தில் அவர் தோன்றும் காட்சிகள் சூப்பர் ஸ்டார்க்கு படையப்பா படத்தில் இருக்கும் ஒபனிங் காட்சி அளவிற்கு பில்டப்பாக வைப்பது. அதே படத்தில் வந்த கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி தோன்றினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

·      படத்திற்கு இரு பாடலாவது செக்ஸ் மசாலா சேர்த்து அரைத்துவிடுவது.
விருது தரும் அளவிற்கு அவர் எழுதிய வரிவாடா வாடா வாட்டர் பாக்கெட்,காத்திருக்கு காலி பக்கெட்டு.


ஒற்றுமைகள்


·      இருவரும் தாய், தங்கை செண்டிமெண்ட் சார்ந்த தீம்களை பிரதானமாகக் கொண்டு படங்கள் எடுத்தது. இதில் டிஆர் எண்ணிக்கையில் அதிக படம் எடுத்துள்ளார்,கட்டாயம் ஒருநாள் பேரரசுவும் இதை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

என் தங்கை கல்யாணி திருப்பாச்சி
ஒரு தாயின் சபதம் சிவகாசி

மேல உள்ள படங்களை ஒப்பிட்டு கொள்ளவும் .

·      இருவர் எழுதிய பாடல்களும் பட்டி தொட்டிகளை கவர்ந்தது.

நான் ஒரு ராசி இல்லா ராஜா (ஒரு தலை ராகம்)
வச்சக்குறி தப்பாது இந்த புலி தோக்காது (கூலிக்காரன்)

கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா  (சிவகாசி)
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததமா (திருப்பாச்சி)

·      சிறப்பு வேடங்களில் இருவரும் தாங்கள் இயக்கும் படங்களில் வந்து பன்ச் டயலாக் பேசுவது.

வேற்றுமைகள்

·      ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக படங்களில் வைத்தவர் பேரரசு.முந்தைய படங்களில் செண்டிமெண்ட்டும் பிந்தைய படங்களில் பிட் காட்சிகளும் (உதா: மோனிஷா என் மோனலிஷா) வைத்தவர் டிஆர்.

·       டிஆர் போல பேரரசு ஒரு படத்தின் ஹீரோவாக இன்னும் நடிக்கவில்லை. விரைவில் அரங்கேறலாம்.

·       நெகடிவ் கிளைமாக்ஸ் டிஆரின் சிறப்பு. சுபம் வகை பேரரசுவின் படங்கள்.

தொடர்ந்து இருவரும் என்ன செய்யலாம் :

·       டி.ஆர் பலமொழி வித்தகர் என்பதால் கன்னடம்,போஜ்பூரி போன்ற மொழிகளில் அவருடைய ஆரம்ப கால ஹிட் படங்களை (ஒரு தலை ராகம்,ரயில் பயணங்களில் போன்ற கிளாசிக்ஸ் தவிர்த்து) ரீமேக் செய்யலாம். சொல்லவே தேவையில்லை படங்களை இவர் தான் விநியோகம் செய்வார்.

·      அரட்டை அரங்கத்தை நிறுத்திவிட்டு நெடுந்தொடர் எடுக்கலாம். எனக்கு ஜோதிடமும் தெரியும் என்று டிஆர் கூறுவதால் எதோ ஒரு டிவியில் தினமும் காலை வேலைகளில் ராசி பலன்கள் சொல்லலாம்.

·      பேரரசு தெலுங்கில் அவருடைய பழனி,திருவண்ணாமலை ஆகிய படங்களை டப்பிங் செய்து வெளியிட்டதில் நல்ல லாபமாம், அதனால் கர்ணூல்,கடப்பா என்று நேரடி தெலுங்கு படம் எடுக்கலாம்.

·       ஒரு தடவை சென்னையில் இருந்து திண்டுக்கல் வரும் போது விக்கிரவாண்டி டாபாவில் பேருந்து 10 நிமிட இடைவெளிக்காக நின்றது. அங்கே ஒரு அண்ணன் ஆடியோ கடையில் ’கானா உலகநாதன் பாட்டு கேசட் இருந்தா கொடுங்கனு கடைக்காரரிடம் கேட்டார்.
அந்த உரிமையாளர் யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பழக்கமில்லாத மெடிக்கல் சாப் முதலாளிகள் வகையறா போல (ஒரு மருந்து இல்லைனா அதற்கு பதில் வேறு கம்பெனி தயாரித்த மாத்திரை தருவாங்க) இந்த கேசட்டை கேட்டு பாருபா எல்லாமே கானா, குத்து பாட்டு தான் என்று குடுத்தார்.அது என்னானு பார்த்தால் அஜித்தின் திருப்பதி பாடல் கேசட். நிற்க

கானா உலகநாதன்,இத்யாதி, இத்யாதி போல பேரரசுவும் ஆடியோ கேசட் வெளியிடலாம்.

·      பேரரசு எழுதி டிஆர் பாடிய யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி
பாடல் பட்டி தொட்டி எல்லாம் பின்னி பெடல் எடுத்ததோட மட்டும் நில்லாமல்
‘நான் கடவுள் படம் வரை ரீச் ஆனது.
அதனால் ’யம்மாடி ஆத்தாடி’ ’ஆண்டிப்பட்டி அரசம்பட்டி’  போன்ற பாடல்களை இருவரும் சேர்ந்து உருவாக்கலாம்.

o o o